January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வெசாக் விழாவை வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக கொண்டு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக கொண்டு நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்‌ஷ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி பிரதான விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கும், அதனுடன் இணைந்ததாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் நாகதீப விகாராதிபதி கலாநிதி தர்மகீர்த்தி ஸ்ரீ நவதகல பதுமகித்தி தேரர், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் முங்ஹேனே மெத்தாராம தேரர், அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான பதிவாளர் கோனதுவே குணானந்த தேரர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மஹாசங்கத்தினருடன் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், புத்தசாசன மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக பிற மதங்களுடன் இணைந்து  இம்முறை அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.