இம்முறையும் இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை வருவது மிகவும் இன்றியமையாதது எனினும் அதன் உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சைகளுக்கு அப்பால் பிரேரணை கண்டிப்பாக வலுமிக்கதாக வர வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸை கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காகப் பலாலி வந்த விமானத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வந்திறங்கினார்.
அவ்வேளை அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பயணிக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அரை மணி நேரம் விமான நிலையத்தில் இருவரும் சந்தித்து உரையாடினர்.
இதன் போது “ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்குப் பின்னால் இருந்து அமெரிக்கா செயற்படும்” என சுமந்திரனிடம் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.