இலங்கையில் கொரோனா தொற்று நோயால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிரான தேசிய அமைப்பு மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆரம்பித்த இந்த பேரணி கொம்பனித் தெரு வரை நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காதே, அடக்கம் செய்ய அனுமதிக்கும் தீர்மானத்தை செயற்படுத்து என்ற கோசங்களுடன் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் வருகையை மையமாக வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரிஷாத் பதியூதின் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கவுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்த போதும், குறித்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டதன் பின்னால் அரசியல் நோக்கங்கள் எதுவுமில்லை எனவும் இது பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் குழுவின் தீர்மானமே எனவும் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.