July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வருகின்றன!

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ கொரோனா தடுப்பூசிகள் எதிர் வரும் வியாழக்கிழமை இலங்கை வருகின்றன.

இலங்கைஅரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்  கோரிக்கைக்கு அமைய இவ் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படுவதாக பிரதி சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இந்தியாவிடமிருந்து ஒரு கோடி (பத்து மில்லியன்) அளவிலான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை பெற புனே சீரம் நிறுவனத்துடன் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த வாரம் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஒப்புதல் அளித்திருந்த நிலையில் அதன் முதல் தொகுதியாக 5 லட்சம் தடுப்பூசிகள் இலங்கை வரவுள்ளன.

இதேவேளை, ஒரு கோடி (பத்து மில்லியன்)அளவிலான  தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய 52.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் இது இலங்கை பெறுமதியில் 1029 கோடி ரூபாய்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் இலங்கையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, பெப்ரவரி 21 ஆம் திகதி வரை ​​338,769 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.