தமிழ்த் தேசியக்கட்சி சிவில் சமூகங்கள் ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்தின் தீர்மானத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.கருணாவதி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது சர்வதேச சமூகத்தின் தீர்மானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் சமூகங்கள் ஒன்றுபட வேண்டும் எனவும் இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தீர்மானத்தில் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட சில முக்கிய விடயங்களில் முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு முன்னேற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்பதை ஆராய வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத குருக்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், அரசியல் ஆய்வாளர்கள், சட்டத்தரணிகள், வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் சங்கங்கள், ஒன்று கூடி பொது நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய நிலையில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமை பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட கடிதத்தில் இன்னும் சில விடயங்களை குறிப்பிட்டு மிகவும் ஒரு பலம் பொருந்திய வரைபாக மாற்றி முன்னர் கையொப்பம் இடாதவர்களையும் ஒன்றிணைத்து குறுகிய நாளைக்குள் வரைபை அனுப்பிவைக்க அனைவரும் முன்வருவீர்கள் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.