November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் விவகாரம்: ‘இந்தியா – இலங்கை உடன்படிக்கை இரத்தாகவில்லை’

திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சிய தொகுதியை கூட்டாக அபிவிருத்தி செய்து இயக்குதல் தொடர்பான இந்தியா – இலங்கை இடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

2021 பெப்ரவரி 17 ஆம் திகதியன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நிகழ்த்திய உரையினை அறிக்கைகள் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம்  சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, 2017 இன் புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட ஏற்கனவே அமுலில் இருக்கும் எண்ணெய் களஞ்சிய தொகுதி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம்  இரு அரசாங்கங்களும் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அதன் பெறுபேறுகளை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் துரிதமாக அமுல்படுத்துவதற்கும் இந்தியா ஆவலுடன் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.