February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரணி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனிடம் பொலிஸார் விசாரணை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம் திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் இன்று 3 மணிநேர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொள்ளக்கூடாதென நீதிமன்றம் விதித்த தடை உத்தரவையும் மீறி  கலந்து கொண்டவர்களுக்கு எதிராக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனின் வீட்டிற்கு சென்ற திருக்கோவில், மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு தடை உத்தரவை மீறி பேரணில் கலந்துகொண்ட கலையரசனுக்கு எதிராக  கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும் இன்றைய தினம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து மாங்குளம் மற்றும் வவுனியா பொலிஸார்  போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.