January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையின் பெயரை மாற்ற வேண்டும்” : அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பில் நாட்டின் பெயரில் மாற்ற செய்யப்பட வேண்டும் என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டிய 13 பரிந்துரைகள் அடங்கிய ஆவணத்தை கொழும்பில் இன்று வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதை புதிய அரசியலமைப்பில் “இலங்கை குடியரசு” என்று மாற்ற வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

ஒரு நாடு செயல்களால் ஜனநாயகமானதாகவோ சோசலிசமானதாகவோ இருக்க வேண்டுமே தவிர, பெயரால் அல்ல என கூறிய அவர், நாட்டின் பெயரை “இலங்கை குடியரசு” என்று மாற்றுவதே ஏற்புடையது என்றார்.

அதேபோன்று சிங்களத்தில் “ஏக்கிய ராஜ்ய” என்ற பதம் தமிழ் மொழிப்பெயர்ப்பில் “ஒற்றையாட்சி” என்று தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பதுடன் ஆங்கிலத்தில் “யுனிடரி” என்ற பதம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

புவியியல் இருப்பிடம் காரணமாக இலங்கை 500 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருதாக சுட்டிக்காட்டியதுடன் இதனை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்தார்.

2,300 ஆண்டுகளாக பௌத்தம் இலங்கையில் பெரும்பான்மையினரின் மதமாக உள்ளது எனவே இலங்கையின் அரச மதமாக பௌத்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் தேர்தல் முறைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த தமது பரிந்துரைகளையும் தெரிவித்திருந்தார்.