July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திண்மக் கழிவு மின்சாரம் : முதல் தேசிய மின் நிலையத்தை வத்தளையில் திறந்து வைக்கிறார் மகிந்த

இலங்கையில் திண்மக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முதலாவது மின் உற்பத்தி நிலையத்தை வத்தளை, கெரவலபிட்டி பிரதேசத்தில் எதிர்வரும்  17 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ திறந்துவைக்கவுள்ளார்.

700 மெட்ரிக் டன் கழிவுப்பொருளில் இருந்து 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடடிய இந்த மின் நிலையத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை கிடைப்பதுடன் மலிவான விலையில் மின்சாரத்தை வழங்கும் வாய்ப்பும் ஏற்படும் என்று மின்சக்தி துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாத்தறை  மாவட்டத்திலும் ஒக்டோபர் மாதத்திற்குள் இது போன்ற திட்டத்தைத் தொடங்க மின்சக்தி துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் ‘உயிரிவாயுவிலிருந்து மின்சாரம்’ தயாரிக்கும் முறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசு கூறுகின்றது.

2023 ஆம் ஆண்டளவில் இந்தத் திட்டத்தின் மூலம் தேசிய மின் விநியோகத்தில் 70% பங்களிப்பை வழங்க முடியும் என்றும், இதன் மூலம் தடையற்ற மின்சாரத்தை மலிவான விலையில் வழங்குவது தனது பொறுப்பு என்றும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.