January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நான்கு தொழிற்சங்கங்களுக்காக இந்தியாவை பகைத்துக்கொள்ள வேண்டாம்’

துறைமுக விவகாரத்தில் நான்கு தொழிற்சங்கங்களுக்காக தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவை பகைக்க வேண்டாமெனவும், அயல்வீட்டுக்காரனே ஆபத்துக்கு உதவுவான் என்பதனை மறந்துவிட வேண்டாம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எவ்வளவோ உதவிகளை செய்துள்ளது. போரைக்கூட இந்தியாவே முடிவுக்கு கொண்டு வந்தது. வடக்கிற்கு ரயில் பாதையை அமைத்து தந்தது. இன்னும் எத்தனையோ உதவிகளை செய்தது. ஆனால் அரசாங்கம் தற்போது இந்தியாவை பகைக்கின்றது என்றார்.

அதேபோல், எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இந்த பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிராகவே பேசுவார். இதன் மூலம் இந்தியாவை சீண்டுவதே அரசாங்கத்தின் நோக்கம். இந்தியா தெற்காசியாவின் வல்லரசு. அந்த நாட்டுடன் பகைக்காதீர்கள் என்றார்.

இலங்கையில் 30 வருட ஆயுதப்போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னராவது எமக்கு நீதியான தீர்வை, வடக்கு,கிழக்கு இணைப்பை,சமஸ்டியை அரசு தருமென எதிர்பார்த்தோம்.ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அடக்கு முறைகளும் ஆக்கிரமிப்புகளும் தான் அதிகரித்தன. இதற்கு எதிராகவே நாம் அண்மையில் ”பொத்துவில் முதல் பொலிகண்டி வரை”யான போராட்டத்தை நடத்தினோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.