வெளிநாடுகளுக்கு காணிகளை வழங்குவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகளவில் உள்ள தென்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தாது, வடக்கு – கிழக்கில் மாத்திரம் பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேட்டுள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் கிழக்கு தொடக்கம் வடக்கு வரையிலும் அதிகளவிலான இராணுவ சாவடிகளையும், முகாம்களையும் அவதானித்தாக குறிப்பிட்டுள்ள சாணக்கியன், இந்தளவுக்கு அங்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்று அரசாங்கத்திடம் கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நினைப்பதை போன்று வடக்கு, கிழக்கு மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் இல்லை. உண்மையில் நாட்டின் மிக முக்கிய பகுதிகளான கொழும்பு மற்றும் தென் மாகாணத்தில் உள்ள பல காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்கியமையே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய பகுதி வடக்கு, கிழக்கு அல்லவெனவும், தெற்கிலேயே அதனை அதிகரிக்க வேண்டுமெனவும் சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.