
File Photo
யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த 97 வீதமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சியுள்ள காணிகளை தேசியப் பாதுகாப்புக் கருதியே இராணுவத்தினர் வைத்திருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.
இதன்போது பிரதமருக்கு பதிலாக பதிலளித்த சரத் வீரசேகர, ”இராணுவத்தினர் முழுமையாக காணிகளை வைத்திருக்கவில்லை. யுத்தம் முடிந்தவுடனேயே 97 வீத காணிகளை விடுவித்துள்ளனர். ஆனால் மிகுதி காணிகள் உளவுத்துறை தகவல்களுடன் தேசியப் பாதுகாப்புக் கருதி வைக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த விடயம் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதனால் இதுபற்றி யாருக்கும் கேள்வியெழுப்ப முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.