எனக்கான பாதுகாப்பை நான் கேட்காத போதும் எனக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் இப்போது எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் சபையில் தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் இடம்பெற்ற பேரணியானது சிவில் சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன், எமது கட்சியினாலும் ஆதரிக்கப்பட்டது. இவை நியாயமான கோரிக்கைகளாகவும் நீதிக்கான விடயங்களாகவும் காணப்பட்டதோடு, ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பினை நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோல் இந்த பேரணியானது சமாதானமான முறையில் நடைபெற்றதோடு, வெற்றிகரமாக நிறைவு செய்தனர். எனவே இவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறேன். மேலும் பேரணி முடிந்த கணமே எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது.
எனக்கான விசேட பாதுகாப்பை எப்போதும் நான் கேட்கவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நான் எங்கும் முறையிடவில்லை. எனினும் அரசாங்கமே எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தனர். கொழும்பு உயர் நீதிமன்றத்தில் HC 242 /2018 எனும் வழக்கு பதியப்பட்டு நால்வர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான ஏராளமான வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்னிடமுள்ளன. மேலும் பதினைந்து பேர் தெற்கின் சிங்கள பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக முப்பது பேரை தடுப்பில் வைக்கும் வரை இவை தொடர்பாக நான் எதனையும் அறிந்திருக்கவில்லை.
எனவே எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எனக்கு தெரிவிக்காது அல்லது நான் முறையிடாத போது அரசாங்கம் அநேகமானோரை தடுப்பில் வைக்குமானால் தற்போது அதை மீளப்பெறுவதேன் என்ற கேள்வி எழுகின்றது. ஒருவேளை இவ்விடயங்கள் உண்மையாக இருப்பின் நான் பேரணியில் பங்குபற்றியதன் விளைவாக அரசாங்கம் என்மீது எரிச்சலடைந்திருக்கலாம். அல்லது, கூறப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான விடயங்கள் பொய்யாகவும் அரசு அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருப்பதாகவும் இருக்கலாம். அல்லது ஏதேனும் சூழ்ச்சிகள் மூலமாக எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை நீக்குவதன் மூலம் எனக்கு தீங்கு விளைவிக்க காத்திருப்போருக்கு சமிக்ஞை அளிப்பதாகவும் இருக்கலாம்.
எனவே இந்த விடயங்களால் எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.