பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1040 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், சம்பள நிர்ணய சபையினருக்கும் இடையே இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நாளொன்றுக்கு 900 ரூபா அடிப்படைச் சம்பளமும் 140 ரூபா வரவு -செலவுத் திட்ட மானிய கொடுப்பனவாகவும் வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபை யோசனையை முன்வைத்துள்ளது.
இந்த யோசனை தொடர்பாக அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக தொழிற்சங்களின் பிரதிநிதிகள் 8 பேரும், அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் 3 பேருமாக 11 பேர் வாக்களித்துள்ளனர்.
அத்துடன் அந்த யோசனைக்கு எதிராக பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் 8 பேரும் வாக்ககளித்துள்ளனர்.
இதன்படி குறித்த யோசனை 3 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளன.
எவ்வாறாயினும் இந்த தீர்மானத்திற்கமைய குறிப்பிட்ட சம்பளத்தை வழங்குவதென்றால் 13 நாட்களே வேலை வழங்க முடியுமென்று பெருந்தோட்டக் கம்பனிகள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பிலான ஆட்சேபனையை எதிர்வரும் இரண்டு வாரங்களில் முன்வைக்க முடியும் என்பதுடன், ஆட்சேபனை முன்வைக்கப்பட்ட பின்னர் அது தொடர்பாக மீண்டும் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.