November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரணிக்கு தடைவிதிக்கும் கோரிக்கை சாவகச்சேரி நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தத் தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு சதி ஏற்படுத்தும் முயற்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் தாக்கல் செய்த அடிப்படையற்ற விண்ணப்பத்தை நிராகரிக்கவேண்டும் என்று சட்டத்தரணி கேசவன் சயந்தன் நீதிமன்றில் வாதாடினார்.

இதன்போது ‘இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையை பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கை மறுக்கின்றது. அத்துடன், ஒரு இனம் நாட்டுக்கு சதி செய்வதாக பொலிஸார் எண்ணுவது ஏனைய இனங்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டும்.

ஆகவே கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பில் பேரணி இடம்பெறும் இடங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.