November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையை பௌத்த போதனைகளுக்கு அமையவே ஆட்சி செய்கிறேன்’: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி

இலங்கையை தான் பௌத்த போதனைகளுக்கு அமைவாகவே ஆட்சி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு, தேசத்திற்கு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் உரிய இடத்தை வழங்கும், அகிம்சைவாத பௌத்த வழிகாட்டல்களின் கீழ், நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைவரும் சமமாக வாழும் உரிமை உண்டு என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளப் போராடிய சுதந்திரத் தலைவர்களுக்கும், நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுக்க உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்கும் ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, இனங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தி, வறுமையை ஒழித்து, பலமான பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் சவால் தம்முன்னே இருக்கின்றதாகவும் ஜனாதிபதி சுதந்திர தின உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பலவீனமாக இருந்த தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தாய் நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ளவே, 69 இலட்சம் பேர் தனக்கு வாக்களித்து, தலைவராகத் தெரிவுசெய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் சிங்கள பௌத்த தலைவர் ஒருவரே என்றும் அதனைக் கூற தான் ஒருபோதும் தயங்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.