பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நடத்த நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள அவருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாகவும் கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டியும் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இவ் அறிக்கையின் பிரகாரமே போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இத்தடை உத்தரவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன், கொரோனா காலப்பகுதியில், சமூக இடைவெளியினை பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை காரணம் காட்டி பொலிஸார் நீதிமன்றங்களை நாடியுள்ளமை மிகவும் வேடிக்கையான விடயம் என குறிப்பிட்டார்.
எனினும் கொழும்பில் கிழக்கு முனையம் தொடர்பில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்க முடியாது போயுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலையின் போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலப்பகுதியில் கூட இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணத்தின் போது நடைபவணிக்கு தடை உத்தரவு விதிக்கப்படவில்லை என்றார்.
இந்நிலையில் ஒரு ஜனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்குத் தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயம் எனவும் கூறினார்.
இதில் குறிப்பாக இலங்கைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கெதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளைத் தூண்டும் விதமாகத் தாமது தரப்பு செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எனினும் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர் இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர் என்றார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், தடை உத்தரவு குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.