November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”உள்ளூர் பொருளாதாரக் கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வதே எங்களின் குறிக்கோள்”

ஒரு குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இலங்கையை இனியும் குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதணி தொழிற்சாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையர் அனைவருக்கும் உள்ள ஒரே கனவு நமது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்பதே ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அவ்வாறான நாட்டை உருவாக்கும் எண்ணத்திற்கு இதுபோன்ற தொழிற்சாலைகள் பங்களிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு தொடர்பான எதிர்பார்ப்புடனேயே மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதன்படி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நமது கடமையை நிறைவேற்றுவோம் என்பதுடன் மக்களின் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின்படி, உள்ளூர் பொருளாதாரக் கொள்கைக்குள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதே எங்கள் குறிக்கோளாக உள்ளது என்றும், இதனால் ஒரு குண்டூசியேனும் தயாரிக்காத ஒரு நாடு என்று  நம்மை நாமே இனியும் குறைக் கூறிக் கொள்வதில் பயனில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.