July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றோம்” : இலங்கை ஜனாதிபதி

இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனது அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து கோட்டாபய ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள் . இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை பலப்படுத்துவதற்காக நானும், எனது அரசாங்கமும் உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கின்றோம்” என்று கோட்டாபய ராஜபக்‌ஷ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸுக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டரில் ” ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.  இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.