November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளாந்தம் மூவாயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வர அனுமதி

நாளாந்தம் மூவாயிரம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி சுற்றுலாத்துறைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய் தடுப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதியில் இருந்து விமான நிலையத்தை முழுமையாக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வர விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த நாடுகளில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு தமது உடல் நிலைமை தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட பின்பே இலங்கைக்கு வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் 90 நிமிடங்களில் விமான நிலையத்தை விட்டு வெளியேறி தாம் பதிவு செய்துள்ள ஹோட்டல்கள், வாடி வீடுகள் ஆகியவற்றிற்கு செல்ல முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சுற்றுலாப்பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளாத வண்ணம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறு இருப்பினும் பிரித்தானியாவில் இருந்து எவரும் இலங்கைக்கு வர முடியாது எனவும், பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களை இலங்கையில் தரையிறக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.