July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கிடையில் மன்னாரில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரசியல் கைதிகளை தைப்பொங்கலுக்கு முன்பாக விடுதலை செய்யக் கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 14 நாட்கள் மும்மதங்களையும் சேர்ந்தவர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களும் இணைந்து பிரார்த்தனை வாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் அரசாங்கத்திற்கு அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் அரசியல் கைதிகளில் குடும்ப நிலையை தெளிவுபடுத்த வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் சட்டத்தரணி எஸ்.டினேஸன் தமிழர் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், தாய் நிலம் அறக்கட்டளை அமைப்பின் இணைப்பாளர் ஏ.சகாயம், சிவில் சமூக செயற்பாட்டாளர் பெணடிற் , மன்னார் நகர சபை உறுப்பினர்கள் , காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் அரசியல் கைதிகள் விடயத்தில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான குழு ஒன்றை அமைப்பதற்கான அவசியம் தொடர்பாகவும் குறித்த குழுவில் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகளை உள்வாங்குவது தொடர்பாகவும் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட தமிழ் மக்களின் அரசியல் சமூக மட்ட பிரச்சினைகளின் உண்மை தன்மையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.