January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூர யாருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது’

பொதுமக்களை நினைவுகூரும் போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் இறந்த பயங்கரவாதிகளை யாரும் நினைவுகூரவோ, ஒற்றுமையின்மையை ஏற்படுத்தவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அகற்றப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகமானது, ஒரு சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமான சொத்தோ, களமோ அல்ல என்றும் அது சட்டத்தை மதிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் உரித்தானது என்றும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூரும் சின்னத்தை பல்கலைக்கழக நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியதை தான் வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டுத் தப்பியோடி, வெளிநாடுகளில் மறைந்து வாழும் முன்னாள் பயங்கரவாதிகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவப் பிரதிநிதிகள் செயற்படுகின்றதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழக விவகாரங்களைக் கண்காணிக்கவே உபவேந்தர் இருப்பதாகவும், தமிழ் அரசியல்வாதிகள் யாழ். பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.