File Photo: Facebook/ Bandaranaike International Airport
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம், உலக நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டுக்குள் நுழையும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அறிவுறுத்தல்களை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும், அதனுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் நாட்டினுள் பயணிப்பதே இந்த ஆபத்துக்கான காரணமென தொற்றுநோயில் ஆய்வுப் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்புபடுகின்ற அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுவது அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு, 9 மாதங்களின் பின்னர் கடந்த 28 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக விமானநிலையம் திறக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக கடந்த திங்கட்கிழமை முதல் யுக்ரையிலிருந்து 500 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அவர்களின் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியபட்டுள்ளது.
இந்நிலையிலேயே தொற்றுநோயில் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.