கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள விமான நிலையங்களை மீள திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வணிக மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணங்கள் உள்ளிட்ட அனைத்து விமான சேவைகளும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் நாட்டினுள் வருவதற்கு அனுமதி வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீண்டும் சுற்றுலாத் துறையின் செயற்படுகளை ஆரம்பிப்பதன் முதற்கட்டமாக யுக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால் கடந்த 9 மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைதர அனுமதி வழங்கப்படவில்லை.
பயணிகள் பரிமாற்றம், பண்டங்களை எடுத்துச் செல்லல், வெளிநாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்துவருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே கடந்த 9 மாதங்களில் விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியோடு, 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
குறித்த விடயத்தைக் கருத்திற்கொண்டு, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை வருவதற்கான விசாவை பெற்றுக் கொள்வது முதல் மீண்டும் பயணிகள் தாய் நாடு திரும்பும் வரையிலான காலப்பகுதியில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவையொன்றை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.