January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 15ஆவது நினைவேந்தல் நிகழ்வு தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் கலாநிதி ஸ்ரீ. ஞானேஸ்வரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவது தொடர்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இவ்வாறான ஒரு நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட எங்களுக்கு உரிமை இல்லையா? என ஸ்ரீ. ஞானேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் 12 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்த போதிலும், போதுமான சாட்சியங்கள் இல்லை என்று அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களின் தன்னெழுச்சியை அடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலையைச் செய்தவர்கள் யார் என்பதை இலங்கையின் நீதிப்பொறிமுறையால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதானது மிகப்பெரும் கேள்வியொன்றை தமிழ் மக்களின் முன்னே விட்டுச்சென்றுள்ளது.

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கும் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி வழங்கப்படுமா என்பதே அந்தக் கேள்வி. இருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதில் இலங்கையின் நீதிப் பொறிமுறை மூலம் என்றுமே வழங்கப்படப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

எனவே சர்வதேச விசாரணையூடாக மட்டுமே இவற்றுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் சர்வதேச விசாரணையைக் கோரி அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் கலாநிதி ஸ்ரீ. ஞானேஸ்வரன் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.