இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் இயங்கச் செய்யும் நோக்கில் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 2600 சர்வதேச சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 215 யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய மூன்றாவது குழு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தவாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் சுற்றுலாத் துறையின் செயற்படுகளை ஆரம்பிக்கும் விதமாக யுக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து சுமார் 2600 சுற்றுலாப் பயணிகள் பல்வேறு குழுக்களாக இலங்கைக்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் தெரிவு செய்யப்பட்ட ஐந்து ஹோட்டல்களில் 7 நாட்கள் வரை கட்டாய தனிமைப்படுத்தலில் தங்கவைக்கப்படுவார்கள்.
சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் காலத்தில் ஹோட்டல்களில் இருந்து வெளிச் செல்லவோ, பொது மக்களுடன் தொடர்புடவோ முடியாத விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கைக்கு வந்து ஏழு நாட்களின் பின்னர் சுற்றுலா நடவடிக்கைகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட நான்கு சுற்றுலாத் தளங்களுக்கு மாத்திரம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இலங்கைக்கு இதுவரையில் மூன்று சுற்றுலாக் குழுக்களில் 604 யுக்ரைன் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த யுக்ரைன் சுற்றுலாப் பயணிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, பொது மக்கள் அதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.