
இலங்கையில் அண்மைக் காலமாக மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள கடும் கிராக்கி காரணமாக அதன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடிக்கொண்டு செல்கின்றது.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள கும்பல்கள் கஞ்சா, ஹெரோயின் போன்று இப்போது மஞ்சளையும் இலங்கைக்குள் கடத்திவரத் தொடங்கியுள்ளன.

தலுவ, நுரைச்சோலை, வங்காலை, மன்னார், பேருவளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த சில வாரங்களில் மட்டும் 10 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான காய்ந்த மஞ்சள் கட்டிகள் இலங்கை கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூர் பெறுமதியில் பல கோடிகள் தேறும்.
அரசாங்கம் கிலோவுக்கு 750 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ள போதிலும், சுமார் 5000 ரூபாய் வரை இந்த மஞ்சள் கட்டிகள் விற்கப்படுகின்றன.
புத்தளம் கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 815 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் பெறுமதி 30 இலட்சம் ரூபா என்று கடற்படையினர் மதிப்பிட்டுள்ளனர்.
கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே உரப் பைகளில் கொண்டுசெல்லப்பட்ட இந்த மஞ்சள் கட்டிகள் சிக்கியுள்ளன.

24 – 31 வயதுகளுக்கு இடைப்பட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் பயணித்ததாக கூறப்படும் சிறிய லொறி ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இறக்குமதி தடை
கொவிட்-19 வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதார சூழலில் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்காக இலங்கையில் வாகனங்கள் உட்பட பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மஞ்சள் மற்றும் ஏலம், மிளகு, கராம்பு உள்ளிட்ட வாசனைத் திரவியங்களின் இறக்குமதிக்கும் கடந்த ஆண்டின் இறுதியில் தடைவிதித்த அரசாங்கம், அவற்றின் உற்பத்தியை உள்ளூரில் ஊக்குவிக்கப்போவதாக கூறியது.
இறக்குமதித் தடைக்கு முன்னர்வரை, இலங்கை தன் மஞ்சள் தேவைக்கு இந்தியாவிலேயே முழுமையாக தங்கியிருந்தது. ஆனால் சிறிதளவாக உள்ள உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு அடைய முடியும் என்று அரசு நம்புகின்றது. அதற்காக 100 கிராமங்களில் மஞ்சள் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த இறக்குமதி தடையால் இப்போது சட்டவிரோத மஞ்சள் கடத்தல்கள் தீவிரமடைந்துள்ளன.
குற்றக் கும்பல்கள்
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலையில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கிலோ மஞ்சள் கட்டிகளையும் தூளையும் கொள்ளையிட்ட கும்பலொன்று அண்மையில் சிக்கியது.
அவ்வாறே, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அளவுக்கு கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூள் சந்தைக்கு வந்துள்ளதாக நாட்டின் நுகர்வோர் அதிகாரசபை மக்களை எச்சரித்துள்ளது.

வெங்காய கொள்கலன்களின் நடுவே மறைத்துவைத்து கடத்தப்படும் மஞ்சள் கட்டிகளும் இலங்கை சுங்கத்துறையினரிடம் சிக்கி வருகின்றன.
இந்த நிலையில், தினசரி பெருமளவு மஞ்சள் பாவனைக்கு பழக்கப்பட்ட இலங்கையில், இறக்குமதி தடுக்கப்பட்ட நிலையில், உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு அடையும்வரை, விலையேற்றத்தையும் கடத்தல்களையும் தடுப்பது சவாலான காரியமாகவே அமையும்.
(தமிழ் அவனி ரிப்போர்ட்)