யாழ்ப்பாணம், – காங்கேசன்துறை கடற்கரை பகுதியிலிருந்து 350 கிலோ நிறையுடைய கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கரையொதுங்கியிருந்த நிலையிலேயே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்டுள்ள கஞ்சா பொதிகளை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக வடக்கு கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மீட்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.