
தமிழின் காதலனாக , சுதந்திர போராட்ட வீரனாக, சாதிகளை சாடிய புரட்சியாளனாக இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவரின் நினைவு தினத்தையொட்டி இலங்கையில் பல இடங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவு தூபியில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன் தலைமையில் பாரதியின் நினைவு தின நிகழ்வு நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அதேபோன்று வவுனியா குருமன்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரதியின் உருவச்சிலைக்கு முன்பாக வவுனியா நகரசபையின் உபதலைவர சு.குமாரசாமி தலைமையில் நினைவு தின நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே,ராஜலிங்கம், க.சுமந்திரன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர். சந்திரகுமார் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் , வர்த்தகர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.