January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பொதுமக்கள் தினம் இனி திங்கட்கிழமையே’: 60 ஆண்டு கால நடைமுறையில் மாற்றம்!

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த புதன்கிழமையை, திங்கட்கிழமையாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் – அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.கடந்த 60 வருடங்களாக இருந்து வந்த ‘புதன்கிழமை நடைமுறை’ நீண்ட கலந்துரையாடலின் பின்னர் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய இனி திங்கட்கிழமை நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. குறிப்பாக அமைச்சரவைக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தினங்கள் புதன்கிழமைகளில் இடம்பெறுவதால் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கவனம் செலுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை கருத்திற்கொண்டு இம்முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் தினத்தில் வேறு கூட்டங்கள், நேர்முகப்பரீட்சைகள் உள்ளிட்ட எதனையும் நடத்துதவற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தினத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அரச அலுவலகங்களில் கடமையில் இருக்க வேண்டும் என்பது தொடர்பான சுற்றறிக்கையொன்று விரைவில் ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.