சுகாதார ஒழுங்குவிதிகளுடன் இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை நத்தார் பண்டிகையை சுகாதார விதிமுறைகளுடன், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது வீடுகளில் தமது உறவினர்களுடன் கொண்டாடுமாறு சுகாதாரப் பிரிவினர் மற்றும் கொரோனா தடுப்பு செயலணியினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், சுகாதாரப்பிரிவினர் பொலிஸார் மற்றம் மதத் தலைவர்களின் தீர்மானங்களுக்கு இணங்க தேவாலயங்களில் இடம்பெறும் விசேட ஆராதனைகளில் சமூக இடைவெளியை பேணக் கூடிவாறு குறைந்தளவானவர்களையே இணைத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய கிறிஸ்தவவர்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு – கிழக்கில் நத்தார் கொண்டாட்டம்
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள தேவாலயங்களில் குறைந்தளவிலானோரின் பங்கேற்புடன் நத்தார் தின விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
யாழ். மரியன்னை பேராலயத்தில் நத்தார் விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அத்துடன் திருகோணமலை மாவட்ட நத்தார் விசேட பூஜை ஆராதனை லிங்க நகர் அன்னை தெரேசா இல்லத்தில் சிறப்பாக இடம்பெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கிறிஸ்டியன் நொயேல் இமானுவேல் ஆண்டகை தலைமையில் ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.
வவுனியா – பூவரசன்குளம் புனித அன்னாள் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்படடிருந்த நிலையில் இன்று காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
தற்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமூக இடைவெளிகளைப் பின்பற்றி சுகாதார வழிமுறைகளுடன் தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெற்றன.
மலையகத்தில் விசேட ஆராதனைகள்
மலையகத்திலும் பல பகுதிகளில் சுகாதார நடைமுறைகளுடன் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அங்குள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் கலை விழாகள் என்பன இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் ஹட்டன் நகரில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.