கொவிட்19 தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இயேசு கிறிஸ்து போதித்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
”இயேசு பிரான் போதித்த சமய நெறிகள் சமூகத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் பல போதனைகளை கொண்டுள்ளது. பாவத்தின் இருளகற்றி, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சகோதர வாஞ்சையுடன் உதவுவது மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்கான அர்ப்பணிப்பு என்பவை இவற்றில் முதன்மையானவை என்று நான் எண்ணுகிறேன்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்து
இந்த புனிதமான நாளில் அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
”நத்தார் பண்டிகை மனித அன்பையும், அமைதியையும் நினைவூட்டும் நாளாகும். இந்த புனித நாளில் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவர்களது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்க நான் மனதார பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.