January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரண தண்டனைக் கைதி எம்.பி.-யாக முடியுமென்றால் தமிழ் கைதிகளை விடுவிக்க முடியாதா?”: வினோ எம்.பி. கேள்வி!

மரண தண்டனைக் கைதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு நீதிமன்றமும் பாராளுமன்றமும் அனுமதித்துள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வளித்தாவது ஏன் விடுவிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி.யான வினோ நோகராதலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் உற்பத்தி,சுங்க,துறைமுக வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.“தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறைகளில் வாடி வருகின்றனர். தம்மை விடுவிக்குமாறு அல்லது வழக்குகளை தொடருமாறு கோரி எத்தனையோ தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் தொடர்பில் எந்த அரசும் அக்கறை காட்டவில்லை. இதனால் பலர் சிறைகளினுள்ளேயே இறந்து விட்டனர். எஞ்சி இருப்போரும் தமது ஆத்ம பலத்தை இழந்து வருகின்றனர்.

அண்மையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்ற உறுப்பினராவதற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றமும் பாராளுமன்றமும் அனுமதியளித்து அவரும் பாராளுமன்றம் வந்து எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் விடுவிக்க அரசும் நீதிமன்றங்களும் மறுக்கின்றன. இந்த தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டுமெனக்கேட்கவில்லை. தங்கள் குடும்பங்களுடன் ஒன்று சேரவே கேட்கின்றனர். எனவே மரணதண்டனை பெற்ற கைதிக்கு எம்.பி.யாக அனுமதியளித்த அரசாங்கம்,நீதிமன்றம், பாராளுமன்றம் என்பன இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்தாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”