
ருமேனியாவில் இலங்கைத் தூதரகமொன்றைத் திறப்பதற்கு இரு நாடுகளிடையேயும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ருமேனியாவின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் கொர்னெல் பெருஸா ஆகியோருக்கிடையே நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலிலேயே இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ருமேனியாவுக்கான இலங்கைத் தூதரகம் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இலங்கை மற்றும் ருமேனியாவுக்கிடையே 63 ஆண்டுகளாக நீடித்து வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ருமேனியாவில் தற்போது 8,000 க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் முக்கியமான பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதுடன், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏனைய துறைகளிலும் திறமையான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக ருமேனிய வெளிவிவகார இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ருமேனியா தூதரகத்தின் தூதுவர் விக்டர் ச்சியுடியா உள்ளடங்கலாக, புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, தொழிலாளர் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வர்த்தகத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.