July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல்- 2021: ‘கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய அணி’

file photo: LPL – Lanka Premier League

இலங்கையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டித் தொடரில், கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய அணியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் குறித்து விளக்கமளிக்கும் போது, எல்.பி.எல் பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட எல்.பி.எல் போட்டிகளில் 6 கிரிக்கெட் அணிகள் களமிறங்கவுள்ளதாகவும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் இருந்து புதிய அணியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அணியிலும் கிறிஸ் கேல், எபிடி வில்லியர்ஸ் போன்ற இரண்டு சர்வதேச முதற்தர கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டின் எல்.பி.எல் தொடரை உலகின் இரண்டாவது இருபது 20 சுற்றுத் தொடராகக் கொண்டுவருவதே தமது இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை எல்.பி.எல் போட்டிகளில் இடம்பெற்ற சில குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றைச் சீர்செய்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்குரிய லங்கா பிரீமியர் லீக் இருபது 20 போட்டித் தொடரை ஜூலை மாதம் 18 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.