
இலங்கைக்கு அனைத்தையும் இறக்குமதி செய்து, விற்பனை செய்யும் நடைமுறையால் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார்துறை தொழில்முனைவோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றும் அதற்கு தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் புதிய அணுகுமுறைகள் இன்றியமையாதது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டுவருவதே தனது நோக்கம் என்றும், அதற்கான திட்டங்களையும் தடைகளையும் அடையாளம் காணுமாறும் ஜனாதிபதி தனியார் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் சுற்றுலா, கட்டட நிர்மாண, தொடர்பாடல், தொழில்நுட்பம், ஹோட்டல், மூலிகை உற்பத்தி, கால்நடைகள், உப்பு உற்பத்தி, விவசாய உட்பத்திகள், சிறு ஏற்றுமதி பயிர்கள், சேதன பயிர்ச்செய்கை போன்ற துறைகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பயிற்றுவிக்கப்பட்ட மனித வள பற்றாக்குறை, நிறுவன திறமையின்மை, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை, மற்றும் புதிய சந்தைகளைக் கண்டுபிடித்தல் போன்ற பிரச்சினைகளை தாம் எதிர்நோக்கி வருவதாக தொழில்முனைவோர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹட்டால ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர்.