சா்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ச்ளினால் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய யாழ்ப்பாணம் நாவலா் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, சா்வதேச விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி காணாமல் போனோரின் உறவினர்களினால் ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மன்னாரில்
இதேவேளை மன்னார் நகரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பேரணியொன்று நடத்தப்பட்டது.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுவரை எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறைகளும் எமக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை சர்வதேசத்திற்கு வலியுறுத்தும் வகையிலே இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில்
வவுனியா நகரிலும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போர்முடிவுற்று 10 வருடங்கள் கடந்துள்ள போதும், இன்னும் எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கபெறவில்லை. காலம் தாழ்த்தாது காணாமல் போனவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதாக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.