இலங்கையில் எல்லா சமூகங்களும் சமமாக மதிக்கப்படும் வகையில் சமஷ்டி, அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியலமைப்பொன்றைத் தயாரித்து, நிறைவேற்றுவதே அரசாங்கம் சர்வதேசத்திடம் இருந்து தப்புவதற்கான ஒரே வழி என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உண்மையான அதிகாரப் பகிர்வை உறுதிசெய்யத் தவறும் போது, யுத்த காலத்தில் பேச்சுவார்தைகளுக்காக நாடுகளின் தலை நகரங்களுக்கு ஏறி, இறங்கியது போல மீண்டும் ஏறி இறங்கும் நிலை ஏற்படும் என்று அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க அஞ்சுவதும், சீனாவின் பின்னால் ஓடுவதும் படையினர் மனிதாபிமானத்துக்கு எதிரான இனப்படுகொலைகளை இழைத்திருப்பதையே காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவம், ஒற்றுமை, சுதந்திரம், ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியலமைப்பைத் தயாரித்து, நிறைவேற்றுவதை இந்த அரசாங்கத்தால் மாத்திரமே செய்ய முடியும் என்பதையும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் கூறுவது உண்மையானால், சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அரசாங்கம் ஏன் தயங்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு எதிராகவோ, அவர்களின் இறைமைக்கு எதிராகவோ இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் நாட்டின் இறைமைக்குப் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டு, தமிழ் மக்களின் இறைமையை இல்லாது செய்யலாம் என்று கனவு காணாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனை இருக்குமானால், தமிழர்களின் நிலங்களை அபகரிக்கவோ, கலாசார சின்னங்களை அழிக்கவோ, தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையிலான சிங்கள இராணுவத்தை வைத்திருக்கவோ மாட்டீர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘நீங்கள் எம்மை சக மனிதர்களாக அன்றி, தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் தொடர்ந்தும் நடத்துகின்றீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. எமது இதயங்களில் இன்னமும் நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கின்றோம்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.