January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முயற்சித்தாக கைதான அருட்தந்தை பிணையில் விடுவிப்பு

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தை எஸ். பாஸ்கரன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இளவாலை பகுதியைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முற்பட்டதாக தெரிவித்து  நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவேந்தலை நடத்த முயற்சித்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அருட்தந்தையை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

அருட் தந்தை எஸ். பாஸ்கரன் கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இல்லாத தடைகளும், அடக்கு முறைகளும் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாகவே மக்கள் செயற்பட்டுள்ளனர் என்றும்,  பொது இடங்களில் ஒன்று கூடாது தமது வீடுகளிலும், பிரத்தியேக இடங்களிலும்  மாவீரர் தின அஞ்சலிகளை செலுத்தியுள்ளதாகவும் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அருட்தந்தையை பொலிஸார் கைது செய்தமை தொடர்பில் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.