November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எண்ணெய் விளக்கில் இயங்கிய வலிகாமம் கிழக்கு தவிசாளார் அலுவலகம் 

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணை விளக்கில் இயங்கியது.

இதுதொடர்பில் பிரதேச தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறிப்பிடுகையில்;

“இம் முறை மாவீரர்களை பொது இடங்களில் நினைவு கூருவதை நீதிமன்றம் தடைசெய்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பை மீறுவது சட்டப்படி குற்றம், தவிசாளரான எனக்கு எதிராக மாவீரர் தின பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கையினைக் கொண்டு மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த தவணையில் பொலிஸாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந் நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்கும் அறிவுறுத்தலுக்கும் மதிப்பளித்து பொது இடத்தில் பிரதேச சபை உறுப்பினர்களுடன் வழமைபோன்று நினைவுகூறலை நான் மேற்கொள்ளவில்லை.

இதேவேளை எமது பிரதேசத்தில் உள்ள 75 ஆயிரத்து 334 பிரஜைகளுக்கும் நான் முதற் பிரஜை என்ற வகையில் எனது அலுவலக அறையின் மின்குமிழ்களை அணைத்துவிட்டு எண்ணெய் விளக்கில் எனது அலுவலகக் கடமைகளை ஆற்றினேன்.

மேலும் எமது கோப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்த செந்துரான் என்ற மாணவன் 5 ஆண்டுகளுக்கு முன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னை மாய்த்துக் கொண்டார்.

அவரது இழப்பினை மனம் ஏற்றுக்கொள்ளாத போதும் உயிர்நீத்த நிலையில் அவரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன்”.