இலங்கையில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றங்களின் ஊடாக தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் தீவிர கண்காணிப்புடன் வவுனியாவில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 21ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதேவேளை நேற்றும் இன்றும் பல பகுதிகளில் மேலதிக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 1379வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் நடைபெறும் பகுதி, பொங்கு தமிழ் நினைவுத் தூபி, ஆலயங்கள் மற்றும் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய பல்வேறு பகுதிகளில் பொலிஸாரின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளதுடன், அப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
குறித்த பகுதிகளில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.