இலங்கையில் மாவீரர் தினம் தொடர்பான நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு அமைவாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறாத வகையில், இன்று காலை முதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில் மர நடுகை நிகழ்வொன்று இன்றைய தினம் காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மர நடுகை இடம்பெற்ற இடத்திற்கு வந்ததால் அங்கு பதற்ற நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் மர நடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டவாறு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் பிரதி நிதிகள் பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
ஆயிரம் தென்னங்கன்றுகள், பத்தாயிரம் பனங்கன்றுகள், இரண்டாயிரம் பயன் தரும் மரக் கன்றுகளை நடும் நடவடிக்கைக்கு அமைவாக ஒரு தொகை மரக்கன்றுகள் அடம்பன் புனித வியாகுல அன்னை ஆலய பகுதியில் நாட்டி வைக்கப்பட்டது.