File Photo
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சிறீதரன் மாவீரர் தினம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பாராமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன் அவரது உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும் வலியுறுத்தினர்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் சிறீதரனால் மாவீரர் தினம் தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டது.
இதன்போது, அரச தரப்பின் பின் வரிசை எம்.பிக்களான மஞ்சுள திசாநாயக்க, பிரகீத் பண்டார மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.யான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் ஒழுங்குப்பிரச்சனையை எழுப்பி சிறீதரன் விடயத்துக்கு அப்பாற்பட்டு பேசுவதாக குற்றம் சாட்டினர் .
இதனையடுத்து சபைக்கு தலைமை தாங்கிய ஹேஷா விதானகே, விடயத்துக்கு பொருத்தமானவற்றை மட்டும் பேசுமாறு சிறீதரனுக்கு அறிவுறுத்தினார்.
எனினும் அவர் தொடர்ந்தும் மாவீரர் தினம் தொடர்பாக பேசிய நிலையில், இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க சிறிதரனின் உரையிலிருந்து மாவீரர் தினம் தொடர்பான கருத்துக்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு கோரினார்.
இதனையடுத்து விடயத்துக்கு பொருத்தமில்லாதவை ஹன்ஸாட்டிலிருந்து நீக்கப்படுவதாக சபைக்கு தலைமை தாங்கிய ஹேஷா விதானகே அறிவித்தார்.