
பொது இடங்களில் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
மாவீரர் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்துக்கே மேற்படி நீதவான் நீதிமன்றங்கள் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன.
இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை, 106 ஆம் பிரிவின் பொதுத்தொல்லை என்ற வியாக்கியனம் மற்றும் கொவிட்- 19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் தடையுத்தரவு கோரியிருந்தனர்.
யுத்தத்தால் உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூர்வதற்காக நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளால், அதிலிருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியளிக்க முடியாது என்று அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தனர்.
போரில் உயிரிழந்த வீரர்கள், உறவுகளை நினைவுகூர்வது மரபு என பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணிகளின் வாதங்களை அடிப்படையாகக் கொண்டு, மாவீரர் தின நினைவேந்தல்களை நடத்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.