January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் நினைவேந்தலுக்கு விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் நாளை நினைவுகூர மன்னார் நீதிவான் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவுக்கு எதிராக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று சட்டத்தரணிகள் ஊடாக நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த போதே விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் எம்.கணேசராஜா குறித்த தடை உத்தரவை நீடித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள மன்னார் நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலருக்கு குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதன்போது குறித்த வழக்கு விசாரணை சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நீதிவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று காலை குறித்த வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த உத்தரவை வழங்க நீதிவான் நீதிமன்றத்துக்குச் சட்டத்திலே நியாயாதிக்கம் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

மேலும் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லாது இருந்தபோதும் கூடப் பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் எந்தச் சட்டத்தையும் மீற மாட்டோம். சுகாதார நடைமுறைகளைக் கையாளுவோம். பொது நிகழ்வை நடத்தினால் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுச் செய்வோம் என்கின்ற உத்தரவாதங்களையும் நீதிமன்றத்துக்கு வழங்கி தடை உத்தரவை நீக்குமாறு சட்டத்தரணி கோரி இருந்தார். எனினும், மன்னார் நீதவான் குறித்த தடை உத்தரவை நீக்க மறுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தால் குறித்த நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும், கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் ஒன்றுகூடினால் குறித்த தொற்று பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுகளை நீடிப்பதாகவும் நீதிவான் தெரிவித்தார்.

இதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவுகூர நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.