November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

6,334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, 2 கிராமுக்கும் குறைவான ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டுகள் மற்றும் 5 கிலோ கிராமுக்கு குறைவான கஞ்சா கடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்கு விசாரணைகளே இவ்வாறு துரிதப்படுத்தப்படவுள்ளன.

அவர்களின் தகவல்கள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு குறப்பிட்டுள்ளது.

இந்த விடயம் மற்றும் சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்று கலந்துரரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.