போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள். அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
‘கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும் வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது’ என ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட சபையில் வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போரில் உயிர்நீத்த தமது பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் உறவுகளுக்கும் தமிழ் மக்கள் தங்கள் அஞ்சலியைத் தெரிவிப்பது அவர்களின் சொந்த உரிமை. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதிக்கோ அல்லது அவர் தலைமையிலான அரசுக்கோ எந்த அதிகாரமும் இல்லை.
நாட்டில் இந்தப் பிரச்சினைகள் உருவாகுவதற்கு அரசே காரணம். உலகத் தலைவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருந்தால் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைய வேண்டிய வாய்ப்பு இருந்திருக்கவே மாட்டாது.
இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கின்றவர்கள், தமிழ் மக்கள் தங்களுடைய வேதனைகளையும் அஞ்சலிகளையும் வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு – சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தடைகளைப் போடுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.
உறவுகளை நினைவேந்தத் தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. அது அவர்களின் சொந்த உரிமை. அதில் அவர்கள் ஏதோவொரு வழியில் சாதித்துக் காட்டுவார்கள். அதை ஜனாதிபதியோ அல்லது அரசோ அல்லது வேறு ஆட்களோ தடுத்து நிறுத்த முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.