November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாவீரர் நாள் நிகழ்வுகள்’: தடைபோடும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ள காவல்துறை!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரணித்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதுவும் வடக்கு -கிழக்கு பகுதிகளில் நடக்காத வண்ணம் காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பல இடங்களில் நீதிமன்றத் தடையுத்தரவுகள் பெற்றுள்ள காவல்துறையினர், பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர்வோர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

‘யாழ். மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை’

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படக் கூடாது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிப் பேராணை மனுக்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த விடயம் தேசிய பாதுகாப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை மாகாணத்திற்குரிய விடயமாக கருத முடியாது என்றும், இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு யாழ். நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் அறிவித்து, யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

கோப்பாய் துயிலும் இல்லம், யாழ். பல்கலை நினைவேந்தல் 

இதனிடையே, “இலங்கையில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன. அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்” என்று யாழ். நீதவான் நீதிமன்றில் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான உத்தரவு செவ்வாய்கிழமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்கப் பிரதேசத்தில் நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் ‘பொதுத் தொல்லை’ என்ற வியாக்கியானத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை பொலிஸார் தாக்கல் செய்தனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், யாழ். மாநகரசபை உறுப்பினர்களான வரதாசா பார்த்திபன், மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

“2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூர்வதற்காக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும்” என்று பொலிஸார் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனாத் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார்  குறிப்பிட்டிருந்தனர்.

பிரதிவாதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையாகி பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தனர்.

குற்றவியல் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற விடயத்துக்குள் நினைவேந்தலைக் கொண்டுவர முடியாது என்றும், குற்றம் ஒன்று நடைபெறப்போகிறது என்றும் அதனைத் தடுக்க கட்டளை வழங்குமாறும் கற்பனையில் பொலிஸார் கோர முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார்.

கடந்த 4 வருடங்களாகப் பொலிஸார் குறிப்பிடும் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன என்றும், அப்போது நினைவேந்தல் நடத்திய குற்றச்சாட்டில் தன்னை கைது செய்யவில்லை என்றும், இப்போது அந்தச் சட்டங்களைத் தான் மீறுவேன் என்று பொலிஸார் எவ்வாறு மன்றுக்கு சுட்டிக்காட்டுவார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன்  வாதிட்டார்.

இந்த நிலையிலேயே கட்டளைக்காக வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை தடையுத்தரவு

இதனிடையே, பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான முடிவு திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகளை தடைசெய்யுமாறு கோரி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

‘சட்டங்களை மீறக்கூடாது’: மல்லாகம் நீதிமன்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் வியாழக்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, பொலிசாரினால் குறிப்பிடப்பட்டு இருந்த தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழான சட்ட ஏற்பாடுகளை மீறாதும், அரசின் வர்த்தமானி அறிவித்தல்களில் கூறப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சின்னங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாமலும் நிகழ்வுகளை நடத்த முடியும் என்றும் அதனை மீறுபவர்களையே கைது செய்யமாறும்  தனது கட்டளையில் குறிப்பிட்டார்.
தேராவில் துயிலுமில்லம்: சிரமதானப் பணிகளை முன்னெடுத்தவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர்

அத்துடன், பொதுக் கூட்டங்களை நடத்துவதானால் பிரதேச மருத்துவ அதிகாரியின் அனுமதியுடனேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான விஸ்வலிங்கம் திருக்குமரன், வி.மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள், இலங்கையின் சட்டதிட்டங்களை மீற மாட்டோம் என வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டளை வழங்கப்பட்டது.

யாழ். தீவகம்
யாழ்ப்பாணம் தீவகத்திலும் நவம்பர் 21 தொடக்கம் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய கொவிட் – 19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய வெள்ளிக்கிழமை மாலை இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டது.

வேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் உள்ளன என்று தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.

அதனால் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் ஒன்றுகூடி நிகழ்வுகளை  நடத்த தடை உத்தரவு வழங்கியது.

கிளிநொச்சி- கனகபுரம்
கிளிநொச்சியிலும் மாவீரர் தினத்தை நினைவுகூர நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நவம்பர் 21 முதல் 27 வரையான நாட்களில் அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடமும் மற்றும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் 15 ஆயிரம் பேர் வரையான மக்கள் ஒன்று கூடிய பகுதியாக கனகபுரம் துயிலுமில்ல வளாகம் பகுதியில் பொலிஸாரினால் வீதித் தடை அமைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்பரவு செய்த சிறிதரன் எம்.பி . உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளை நினைவுகூர மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் உள்ள பகுதியில் 13 பேருக்கும், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் உள்ள 11 பேருக்கும், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் உள்ள 4 பேருக்கும் மற்றும் மல்லாவி, மாங்குளம் பொலிஸ் பிரிவு உள்ளடங்கலான பகுதிகளில் உள்ள 35 பேருக்கும் எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யத் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

வவுனியா

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும எனக் கோரி வவுனியா பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மட்டக்களப்பு  

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிசாரினால் மேற்படி தடையுத்தரவு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் வழங்கப்பட்டது.

திருகோணமலை- சம்பூர்

திருகோணமலை – சம்பூரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதித்து மூதூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி துயிலுமில்லம்
சம்பூர் – கிழக்கு ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவை அனுஷ்டிக்க தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கும், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமென பொலிஸாரினால் கூறப்பட்டது.
இதனையடுத்து எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு நிகழ்வுகளை நடத்தவோ அங்கு பிரவேசிக்கவோ தடை விதித்து மூதூர் நீதவான் உத்தரவிட்டார்.
அதேபோன்று வேறு இடங்களில் விளக்கேற்றல், மக்களை ஒன்று சேர்த்தல், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி எச்சரிக்கை
இதனிடையே, “போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது” என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், அவ்வமைப்புக்குப் பரப்புரை செய்யும் நோக்கிலும் பொதுவெளியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமானால் – சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு”‘: சம்பந்தன்

ஆனால், “தமிழினத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை – தமது உறவுகளை நினைவுகூர வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமையுண்டு. அதைச் சட்டங்கள் கொண்டு தடுத்துநிறுத்த இராணுவத் தளபதிக்கோ அல்லது வேறு எவருக்குமோ எந்த அதிகாரமும் இல்லை.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.