January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் மாவீரர் தினத்தை நினைவுகூர தடை விதிப்பு

கிளிநொச்சியில் மாவீரர் தினத்தை நினைவு கூர நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரியினால் இத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவானது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு எதிராக பெறப்பட்டு இன்று அவரிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிகழ்வுகளை நேற்று வவுனியாவில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஏ.ஆர். 1679/20 என்ற வழக்கின் அடிப்படையில் 21.11.2020 தொடக்கம் 27.11.2020 வரையான நாட்களில் அஞ்சலி நிகழ்வுகள் எதனையும் நடத்தக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கட்டளையை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜீவகஸ்தவினால் பாராளுமன்ற உறுப்பினர்   சிறீதரனுக்கு  இன்று காலை 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனுக்கும் இன்று கிளிநொச்சி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு கரைச்சி பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.