January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய திட்டம்: சிக்கலில் ஆசிய அணிகள்

டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கான இரண்டு அணிகளையும் தெரிவுசெய்யும் விதிமுறையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓர் அணி பெற்ற வெற்றி தோல்விக்கு அமைவாக சதவீத அடிப்படையில் கணித்து அதற்கமைய இறுதிப் போட்டிக்கான இரண்டு அணிகளும் தீர்மானிக்கப்படவுள்ளன.

இந்தப் புதிய திட்டத்தின் பிரகாரம் இந்திய அணி இனிவரும் சகல தொடர்களிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிட்டும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப் போட்டி மீது எதிர்பார்ப்பு வைப்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோனா அச்சத்தால் பல கிரிக்கெட் தொடர்கள் கைவிடப்பட்டதே அதற்குக் காரணமாகும். தற்போதைய நிலையில் சதவீத அடிப்படையில் அவுஸ்திரேலியா 82.22 எனும் வீதத்துடன் முதலிடத்தை வகிக்கிறது.

இந்தியா 75 வீதத்துடன் இரண்டாமிடத்திலும், இங்கிலாந்து 60.83 வீதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து, தென்ஆபிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் அதற்கடுத்த இடங்களில் இருக்கின்றன.

தற்போதைய சதவீதத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்திய அணி அடுத்து விளையாடும் சகல தொடர்களிலும் வெற்றிபெற்றாக வேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா தோல்வியடைந்தால் அது இங்கிலாந்துக்கான வாய்ப்பை அதிகரித்துவிடும்.

அதேபோன்று இலங்கை தென் ஆபிரிக்க மற்றும் நியூஸிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்களின் முடிவும் இறுதிப் போட்டிக்கான அணிகளை தெரிவுசெய்வதில் ஆதிக்கம் செலுத்தும்.

எவ்வாறாயினும், இந்த சகல அணிகளும் தாம் விளையாடும் தொடர்களை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் தற்போதைய சதவீத கணிப்பில் அணிகளின் பட்டியல் மாறுபடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.